புதுடில்லி: ஒருவரின் பெயரில் வைத்திருக்கக்கூடிய சிம் இணைப்புகளுக்கான ஏற்கனவே உள்ள வரம்பை கடுமையாக அமல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருவரின் பெயரில் ஒன்பது சிம் இணைப்புகள் இருந்தால், அதற்கு மேல் புதிய சிம் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய அமலாக்க நடைமுறை நாளை மறுநாள் முதல் செயல்பாட்டுக்கு வரும். நாடு முழுவதும் அதிகபட்சம் 9 இணைப்புகள் என்ற வரம்பு நடைமுறையில் இருக்கும் நிலையில், ஜம்மு–காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சம் 6 சிம் இணைப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.
புதிய சிம் பெற விண்ணப்பிக்கும் நபரின் பெயரில் ஏற்கனவே உள்ள மொபைல் இணைப்புகளை நிறுவனங்கள் முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும். இதற்காக அரசின் ‘டிஜிட்டல் இன்டலிஜென்ஸ் பிளாட்பார்ம்’ தளத்தின் மூலம் வாடிக்கையாளர் விவரங்களை ஒப்பிட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர் தகவல்கள் ஒருங்கிணைந்த முறையில் கிடைப்பதால், ஒருவரின் பெயரில் உள்ள இணைப்புகளின் எண்ணிக்கையை கண்டறிய முடியும்.
வரம்பை ஏற்கனவே எட்டியுள்ளவர்களை அடையாளம் காண நாளை முதல் அந்த தளத்தில் புகைப்பட அடிப்படையிலான அடையாள வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறி தவறுதலாக சிம் வழங்கப்பட்டால், விண்ணப்பப் படிவ விதிமுறைகளின்படி அந்த இணைப்பு உடனடியாக முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இன்டலிஜென்ஸ் தளத்துடன் தங்களின் தொழில்நுட்ப அமைப்புகளை ஒருங்கிணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே பெயரில் அதிக அளவில் இணைப்புகள் பெறப்படுவதைத் தடுப்பதன் மூலம் தவறான செயல்களுக்கு அவை பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





