தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட தொலைபேசி இணைப்பு முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறைச் செயலரை எதிர் தரப்பு சாட்சியாக அழைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த வழக்கு 2004–07 காலகட்டத்தைச் சேர்ந்தது. அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக தொலைபேசி இணைப்புகள், அவரது சகோதரர் கலாநிதி மாறனுடன் தொடர்புடைய ‘சன் நெட்வொர்க்’ நிறுவனத்தின் வர்த்தக பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்துள்ளது. வழக்கு சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கு முன், அமைச்சருக்கு அனுமதிக்கப்படும் தொலைத்தொடர்பு வசதிகளின் வரம்புகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து தெளிவுபடுத்த அதிகாரிகளின் சாட்சியம் முக்கியம் எனக் கூறி, தொலைத்தொடர்பு செயலரை நீதிமன்ற சாட்சியாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அருண் பள்ளி அமர்வு, உயர் நீதிமன்றத்தின் ‘நீதிமன்ற சாட்சி’ உத்தரவை ரத்து செய்தது. அதே நேரத்தில், சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் தொலைத்தொடர்பு செயலரை தயாநிதி தரப்பு எதிர் தரப்பு சாட்சியாக அழைக்க அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தது.