புதுடில்லி ஜந்தர் மந்தரில் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிராக நேற்று நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இடஒதுக்கீடு பொருளாதார அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டம் ‘இடஒதுக்கீட்டு மறுசீரமைப்பு இயக்கம்’ தலைவர் ஹர்ஷ் துபே தலைமையில் நடைபெற்றது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெனரல் சேனா, சாணக்கிய சேனா, கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். மேலும், யுஜிசி (UGC) புதிய விதிகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
அவர்கள் கூறியதாவது, கல்வி உதவித்தொகை, கட்டணச் சலுகை போன்ற ஆதரவுகள் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு நேரடியாகச் சென்றடைய வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டு முறையை, தற்போதைய சமூக மற்றும் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தலைநகரில் பெருந்திரள் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது. போலீசார் தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.





