தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கு பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என, சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை (DVAC) தெரிவித்துள்ளது. வேலு தாக்கல் செய்த வழக்கு ரத்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் துறை கோரியுள்ளது.

ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படாமல், தனியார் நிறுவனங்களுக்கு தொகைகள் விடுவிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. இதன் அடிப்படையில், வேலு உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என 11 பேருக்கு எதிராக DVAC போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வேலு மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, DVAC தரப்பில் ஜூன் 25 அன்று சென்னை மற்றும் திருவண்ணாமலையில் 20 இடங்களில் தேடுதல் நடத்தி ஆவணங்கள் மற்றும் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. வழக்கு தற்போது புலன் விசாரணை நிலையில் இருப்பதாகவும், வழக்கு பதிவு சரியான முறையிலேயே செய்யப்பட்டதாகவும் துறை வாதிட்டது.

மேலும், இது பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றும், தொகையை விடுவித்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாததற்கு காரணம் வேலு தான் என்றும் DVAC தெரிவித்தது. துறை ரீதியான நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஓராண்டு ஊதிய உயர்வு மட்டும் நிறுத்தப்பட்டதாகவும், அந்த துறை விசாரணை ‘கண்துடைப்பு’ எனவும் கூறப்பட்டது.

அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பதில் மனுவில், அரசு கருவூலத்துக்கு பெரிய இழப்பு ஏற்படுத்திய வழக்கின் விசாரணையை தடுக்க முயன்றே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, விசாரணையை முடிக்க DVAC-க்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. இதையடுத்து, இறுதி விசாரணையை செப்டம்பர் 10க்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை வேலு மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டித்தார்.