இஸ்லாமாபாத்: நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி தலைவருமான இம்ரான் கான் (73) மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற நிலையில், 2023 முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் உள்ளார். அவருக்கு கடுமையான மன அழுத்தம் மற்றும் கண் பார்வை தொடர்பான பிரச்னைகள் இருப்பதாக குடும்பத்தினர் கூறியிருந்தனர்.

இதையடுத்து, ஆகஸ்ட் 18 அன்று உச்ச நீதிமன்றம் அவருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் அரசு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இஸ்லாமாபாதில் உள்ள ஷிபா சர்வதேச மருத்துவமனையில் அவர் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். கண் மருத்துவர், இதய நோய் நிபுணர் மற்றும் பொது மருத்துவர் அடங்கிய குழு பரிசோதனை செய்து, அவர் உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தது.

அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னர், மறுநாள் அதிகாலை சுமார் 5 மணியளவில் இம்ரான் கான் மீண்டும் அடியாலா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.