மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்பில் “சமரசம் இல்லை” எனத் தெரிவித்துள்ள உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே, விதிமீறல்கள் மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் தொடர்பாக பிரபல உணவகங்கள் மற்றும் பன்னாட்டு ஃபாஸ்ட்-ஃபுட் நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் 89 பிரபல ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தாபாக்களில் உணவுப் பாதுகாப்புத் துறை குழுவினர் ஆய்வு நடத்தினர். இதில் 71 நிறுவனங்களுக்கு தரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், 13 நிறுவனங்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பாம்பே பிரசிடென்சி ரேடியோ கிளப் மற்றும் தெற்கு மும்பையில் உள்ள மெக்டொனால்ட்ஸ் பேமிலி ரெஸ்டாரன்ட் ஆகியவற்றின் மீது சுகாதாரக் குறைபாடு காரணமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இடைநிறுத்த காலத்தில் உணவுப் பொருட்களை கொள்முதல், விற்பனை மற்றும் விநியோகம் செய்வதை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மதிப்பதாகவும், அதிகாரிகள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை சரி செய்வதாகவும் தெரிவித்தது. 148 பக்க அறிக்கையையும் சமர்ப்பித்ததாக கூறப்பட்ட நிலையில், “முக்கிய குறைபாடுகளுக்கு இன்னும் தீர்வு இல்லை” என துக்காராம் முண்டே தெரிவித்ததாக செய்தி கூறுகிறது.
மேலும் நாக்பூர் பிரதர்ஸ் ஷவர்மா கடை, நாசிக் அவந்தி ஸ்நாக்ஸ், அமராவதி பிண்டு யாதவ் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட இடங்களின் உரிமங்களும் இடைநிறுத்தப்பட்டன. கேஎப்சி சிக்கன் கடைகளில் கெட்டுப்போன உணவு, சுகாதாரமற்ற சூழல், கரப்பான் பூச்சிகள் கண்டறியப்பட்டதாகவும், சத்ரபதி சம்பாஜிநகரில் ஒரு உணவகம் மற்றும் விருந்தரங்க பயன்பாட்டுக்காக வைத்திருந்த சோளம், கம்பு மாவில் பூச்சிகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





