புதுடில்லி: யமுனை நதியின் வெள்ளப்பரப்பில் கலாசார நிகழ்ச்சி நடத்தியதாகக் கூறி ஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அறக்கட்டளைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) விதித்த ரூ.5 கோடி அபராதத்தை சுப்ரீம்கோர்ட் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.
இந்த வழக்கு, 2016 மார்ச் மாதத்தில் டில்லியில் யமுனை நதிக்கரையில் நடைபெற்ற ‘உலக கலாசார விழா’ தொடர்பானது. அந்த நிகழ்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி, NGT ரூ.5 கோடியை இழப்பீடாக செலுத்த உத்தரவிட்டிருந்தது.
அபராதத் தொகையை செலுத்திய பின்னர், NGT தீர்ப்பை எதிர்த்து வாழும் கலை அமைப்பு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, ஆகஸ்ட் 22 அன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, விழாவால் யமுனை நதியின் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்பட்டதாக நிரூபிக்கும் ஆதாரம் இல்லை என்று கூறியது. மேலும், அமைப்பு செலுத்திய ரூ.5 கோடியை டில்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.





