திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “போர் அடிக்கிறது என்பதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல நாம்; போராட வந்தவர்கள்” என்று தெரிவித்தார். சென்னை நகரில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் அவர் இதை கூறினார்.

கட்சியின் வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழு கூட்டமாக அமையும் என குறிப்பிட்ட ஸ்டாலின், செயற்குழுவின் ஒப்புதலுடன் கட்சியின் அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த பிறகும் கட்சி வலிமையுடன் இருப்பதற்கு அதன் அமைப்பு முறையே காரணம் என்றார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறிய “என் வாழ்வு முடிந்தாலும் திமுகவின் வாழ்வு முடியாது; அதை அதன் அமைப்பு முறை காப்பாற்றும்” என்ற கருத்தை நினைவூட்டிய அவர், அந்த அமைப்பு வலிமையால்தான் கட்சி நிலைத்து நிற்கிறது என்று கூறினார்.

தோல்விகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், நிர்வாகிகளின் செயல்பாடுகளும் அதில் ஒன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு தொகுதியாக குறைகளை கண்டறிந்து ஆட்களை மாற்றுவதற்குப் பதிலாக, முழுமையான சுய பரிசோதனை அவசியம் என முடிவு செய்ததாகவும், அதன்படி நிர்வாக அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த மாற்றங்கள் சிலருக்கு கடுமையாகவும் கசப்பாகவும் இருக்கலாம் என்றாலும், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இம்மாற்றங்கள் அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் கட்சி உயிர்ப்புடன் தொடர்வதை உறுதி செய்யும் என்றும் கூறினார். பின்னர் சமூக வலைதள பதிவில், அடுத்த நூறு ஆண்டுகளுக்கான பயணம் தொடர தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், “Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம் திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.