செப். 1 முதல் திரையரங்குகளில் புதிய படங்களை வெளியிடுவதில்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஓடிடி வெளியீட்டுடன் தொடர்புடைய புதிய நிபந்தனைக்கு எதிர்ப்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில் இந்த நிலைப்பாடு அறிவிக்கப்பட்டது.

அதில், “திரையரங்குகளில் வெளியான படங்களை 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிடுவோம்” என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான் அந்தப் படங்களை திரையிடுவோம் என, தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.

தென்னிந்திய மாநிலங்களில் இப்படியான நடைமுறை இல்லாத நிலையில் தமிழகத்தில் மட்டும் இதை அமல்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், ஆண்டுக்கு வெளியாகும் சுமார் 250 படங்களில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஏற்கனவே நஷ்டத்தை சந்திப்பதாகவும் அவர்கள் கூறினர். இதை எதிர்த்து செப்.1 முதல் புதிய பட வெளியீட்டை நிறுத்துவதோடு, படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட பணிகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண முயற்சிப்பதாகவும் கூறினர்.

தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில், புதிய படம் திரையரங்குகளில் வெளியான சுமார் 4 வாரங்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியாகும் நடைமுறை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.