சென்னை: தமிழகத்தில் சிதிலமடைந்த 366 கோவில்களில் மொத்தம் ரூ.245 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் அறிவித்தார்.
சட்டசபையில் அவர் 106 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய 64 கோவில்களுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வகை சிதில நிலைகளில் உள்ள கோவில்களுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட திட்டங்களாக, சென்னை அருகே குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.5.50 கோடியில் மூன்றாம் சுற்று மண்டபம் கட்டப்படும். திருச்சி மாவட்டம் அன்பில் மாரியம்மன் கோவிலில் ரூ.1.50 கோடியில் பக்தர்கள் தங்கும் மண்டபம் அமைக்கப்படும். மேலும், திருவண்ணாமலை மற்றும் கோவை மாவட்டங்களில் சில கோவில்களில் தலா ரூ.1 கோடியில் புதிய பொங்கல் மண்டபங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையில் கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில், நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில் தலா ரூ.2 கோடியில் புதிய மரத்தேர் அமைக்கப்படும். கூடுதலாக ரூ.16 கோடியில் 25 தேர்கள் மற்றும் ரூ.40 கோடியில் 100 சிதிலமடைந்த கோவில் குளங்கள் சீரமைப்பு பணிகளும் இடம்பெறும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.11 கோடியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், திருச்செந்தூருக்கு ரயில்/பஸ் நிலையங்களில் இருந்து கட்டணமில்லா மினி பஸ் சேவை மற்றும் நெல்லை மாவட்டம் காரையார் அய்யனார் கோவிலுக்கு இலவச பஸ் சேவைக்கான வாகன வாங்குதலும் அறிவிக்கப்பட்டது. கோவில் பணியாளர்களுக்கான ஈட்டிய விடுப்பு உயர்வு, பணப் பலன்கள், கோவில் நடத்தும் கல்லூரிகளில் முன்னுரிமை மற்றும் கல்விக் கட்டணத்தில் 50% சலுகை போன்ற நலத் திட்டங்களும் இடம்பெற்றன.
மேலும், கோவில்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்ப வேண்டிய காலிப் பணியிடங்களை நிரப்ப ‘திருக்கோவில் பணியாளர் தேர்வு வாரியம்’ அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதுவரை அச்சில் வராத கோவில் வரலாறு மற்றும் பக்தி தமிழ் இலக்கிய நூல்கள் உள்ளிட்ட 108 நூல்கள் வெளியிடப்படும் என்றும், கோவில் தல வரலாறு ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் என்றும், அருளாளர், ஆழ்வார்கள், சித்தர்கள் மற்றும் கிராம தெய்வங்களுடன் தொடர்புடைய விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.





