எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, கோவையில் இந்த முடிவு குறித்து பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. அறிவிப்பு சர்ச்சையாக மாறிய நிலையில், மக்கள் அரசுச் செலவின் அவசியம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

சிலர், அரசு நிதியில் கார் வழங்குவது தேவையற்றது என்றும், மாநிலம் கடன் சுமையில் இருப்பதாக கூறும் சூழலில் இப்படியான சலுகைகள் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் என்றும் விமர்சித்தனர். எம்.எல்.ஏ.க்கள் மாதம் ரூ.1 லட்சத்துக்கும் மேல் சம்பளம் பெறுவதுடன், பிற படிகளும் உள்ளதால் வங்கிக் கடன் மூலம் கார் வாங்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

கார் வழங்கப்பட வேண்டுமெனில் அது அரசு வாகனமாகவே இருந்து, பதவி காலம் முடிந்ததும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சிலர் கூறினர். மேலும் பராமரிப்பு செலவுக்கென தனி நிதி ஒதுக்காமல், போக்குவரத்து துறை போன்ற அரசு துறைகளே பராமரிப்பை கவனிக்கலாம்; உதவியாளர் நிதியும் கூடுதல் சுமையாகும் என்ற வாதமும் முன்வந்தது.

மற்றொரு தரப்பு, எம்.எல்.ஏ.க்கள் பல இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்னைகளை ஆய்வு செய்ய வேண்டியதால் வசதிகள் தேவை என ஆதரித்தது. ஆனால் அரசு வாகனமாக வழங்குவதற்குப் பதிலாக வட்டி இல்லா கடன் மற்றும் பெட்ரோல் அலவன்ஸ் போன்ற மாற்று ஏற்பாடுகள் இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், எல்லோருக்கும் ஒரே மாதிரி கார் வழங்காமல், வாங்க வசதி இல்லாதவர்களுக்கு மட்டும் வழங்கினால் விமர்சனம் குறையும் என்ற கருத்தும் வெளியானது. சிக்கன நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்திய சிலர், பள்ளிக்கு தொலைதூரம் பயணிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் மின்சைக்கிள் போன்ற உதவித் திட்டங்களை முன்னுரிமை அளிக்கலாம் என்றும் கூறினர்.