தமிழக பதிவுத்துறை, ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறையை ஐந்து கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்படுவதால், வரிசை முறைக்கான “டோக்கன்” பெற வேண்டிய தேவை இல்லை என அறிவித்துள்ளது.

பதிவுத்துறையின் STAR 3.0 மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைப்பிரிவுகளில் வீடு/மனை விற்பனை பத்திரங்களை சார்-பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஆகஸ்ட் 17 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

புதிய வீடு, மனை விற்பனை பத்திரங்களுடன், வீட்டுக் கடனுக்கான ஆவணம் ஒப்படைப்பு அடமான பத்திரம் (MOD) மற்றும் கடன் முடிவுக்கான ரசீது ஆவணங்களையும் அலுவலகம் வராமல் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. தேவையான கருவிகள் அனைவரிடமும் இல்லாததால், வீடு/மனை விற்பனை நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு சென்று இந்த பதிவை மேற்கொள்ள முடியும்.

இந்த நடைமுறையில், (1) சொத்து விவரங்கள் மற்றும் வாங்குபவர்–விற்பவர்–சாட்சிகள் தகவல்களை பதிவேற்றம் செய்தல், (2) ஆதார் சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் பதிவு, (3) முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துதல், (4) ஆன்லைனில் தாக்கலுக்கு ஒப்புதல் அளித்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தல், (5) சார்-பதிவாளர் சரிபார்த்து பதிவு முடித்தல் என ஐந்து கட்டங்கள் உள்ளன.

விண்ணப்பதாரர் பதிவேற்றம் செய்த பத்திரம், இணைப்பு ஆவணங்கள் மற்றும் அடையாள சான்றுகளை சார்-பதிவாளர் 24 மணி நேரத்தில் சரிபார்த்து முடிவு எடுப்பார் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பின்னர் டிஜிட்டல் கையெழுத்துடன் பதிவு நிறைவடைந்து, விண்ணப்பதாரரின் லாக்-இன் பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.