தமிழ்நாட்டின் 14 மாநில பல்கலைகளில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணங்களை விளக்கி, உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் வேளாங்கண்ணி ஜோசப் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மனுவில், பொறுப்பு பதிவாளராக உள்ள முத்தையாவுக்கு தேவையான தகுதிகள் இல்லை என்றும், அவரை பதவியிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

பல்கலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜராகி, முத்தையா நிரந்தர பதிவாளராக அல்லாமல் தற்காலிகமாக பொறுப்பு பதிவாளராக மட்டுமே பணியாற்றுகிறார் என்றும், தேவையான தகுதிகள் உள்ளதாகவும், உரிய அதிகாரியால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நிரந்தர பதிவாளரை நியமிக்க ஜூன் 2-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன; நியமன நடவடிக்கைகள் தொடர்கின்றன என்றும் கூறினார்.

நீதிபதி பி. புகழேந்தி, இருதரப்பும் தெரிவித்தபடி மாநிலத்தில் 14 பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படுகின்றன; பல பல்கலைகள் பொறுப்பு பதிவாளர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன; முக்கிய முடிவுகள் ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டார். மனுவை ஏற்க நீதிமன்றம் விரும்பவில்லை என்றாலும், பல ஆண்டுகளாக துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பது குறித்து அரசு தரப்பில் விளக்கம் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

துணைவேந்தர் பதவிகள் ஏன் நிரப்பப்படவில்லை, அவற்றை நிரப்ப அரசு நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதற்கான விவரங்களை முதன்மை செயலரிடமிருந்து பெற்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பரதன் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.