வாஷிங்டன்: வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராமல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து பல நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்து வருகிறார். அதே போக்கில், கனடாவுடன் நடந்த பேச்சுவார்த்தை முறிந்ததையே காரணமாகக் காட்டி இந்த புதிய வரி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறுகையில், இந்த வாரத் தொடக்கத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கனடா மறுத்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், எஃகு மற்றும் அலுமினியம் போன்ற துறைகளில் வரிகளை குறைப்பதாக அமெரிக்கா முன்வைத்த சலுகைகளையும் கனடா நிராகரித்ததாக அவர் கூறினார்.
இதற்கு பதிலடியாக தங்களும் வரி விதிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார். அமெரிக்க முன்மொழிவில் கடைசி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் நியாயமற்றவை என்றும், வரும் நாட்களில் கனடா தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு கூடுதல் ஆதரவை அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார். மேலும், கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதம் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை குறைத்து, ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
வாகனங்கள், எஃகு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளில் இருந்து நிவாரணம் கோரி கனடா வலியுறுத்தி வருகிறது. இந்த வரிகள் கனடா பொருளாதாரத்தில் சுமையை ஏற்படுத்தி, வேலை இழப்புகளுக்கு வழிவகுத்ததாகவும், ஒருகாலத்தில் வலுவாக இருந்த இருநாட்டு வர்த்தக உறவை பாதித்ததாகவும் கனடா தரப்பு கூறுகிறது.





