சென்னை: தமிழக சட்டசபையில், முதல்வர் விஜய் முன்பு குறிப்பிட்டதாக கூறப்படும் “மூன்று கோப்புகள்” தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடுமையாக கேள்வி எழுப்பி, ஆதாரம் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவால் விடுத்தார்.

உதயநிதி பேசுகையில், முதல்வர் தனது மேசையில் மூன்று கோப்புகள் உள்ளதாகவும், அதைத் திறக்க வைக்க வேண்டாம் என்றும் கூறி, முந்தைய ஆட்சியை குற்றம் சாட்டும் வகையில் தொடர்ந்து பேசி வருவதாக தெரிவித்தார். இதே விஷயத்தை மூன்று மாதங்களாக கூறிக்கொண்டே இருப்பதாகவும், ஏன் தாமதம் செய்கிறார் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்கையில், அரசுக்கு எந்த பயமும் இல்லை என்றும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரித்து, ஆதாரங்களுடன் முதல்வர் அலுவலகத்தில் வைத்துள்ளதாகவும் கூறினார். அதன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அன்றே சொல்ல வந்ததாகவும், அப்போது உதயநிதி சபைக்கு வராததால் அது அவருக்கு தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சபாநாயகர் தலையிட்டு, முதல்வர் கோப்புகளை ஆய்வு செய்து, அமைச்சர்களுடன் ஆலோசித்து சுயமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர் என்றும் குறிப்பிட்டார். முதல்வர் மேசையில் கோப்பு உள்ளது என கூறினால், அது ஆய்வில் இருப்பதாகவே பொருள் கொள்ள வேண்டும்; அதை சவால் விடுப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து உதயநிதி மீண்டும் வலியுறுத்தி, அந்த கோப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும் என்றும், உண்மையில் ஆதாரம் இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் கூறினார். உருட்டல், மிரட்டல்களுக்கு தாங்கள் பயப்பட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.