த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், காங்கிரசில் மீண்டும் இணைவதா அல்லது காங்கிரஸ் கூட்டணியில் சேர்வதா என்ற முடிவை பரிசீலித்து வருவதாக த.மா.கா. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு த.மா.கா. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அழைப்பு விடுத்தார்.
மேலும், த.மா.கா. நிறுவனர் தலைவரும் வாசனின் தந்தையுமான மறைந்த மூப்பனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை புகழ்ந்து தாகூர் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, வாசன் காங்கிரசுக்கு ஆதரவாக பேசத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
டில்லியில் நடைபெற்ற, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எழுதிய நூல் வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை வாசன் சந்தித்து பேசினார் என்றும், இருவரும் பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம் பெறவும், காங்கிரசுடன் இணைந்து செயல்படவும் வாசன் விரும்புவதாக கூறப்படுகிறது. விரைவில் டில்லி செல்ல உள்ள அவர், காங்கிரசில் நேரடியாக இணைவதா அல்லது அதன் கூட்டணியில் சேர்வதா என்பது குறித்து மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.





