புதுடில்லி: 2029 லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.க) ஆளும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல்களையும் நடத்தும் வாய்ப்பை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பல தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து, 2024 டிசம்பரில் நடந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் அரசியலமைப்பு 129-வது திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அது பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு (JPC) அனுப்பப்பட்டது.
கூட்டுக்குழு தலைவராக நியமிக்கப்பட்ட பா.ஜ.க எம்.பி. பி.பி.சவுத்ரி, பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்று வருவதாகவும், 2029க்குள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவையான கட்டமைப்பை உருவாக்குவதில் குழு கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே லோக்சபாவுடன் சேர்ந்து சட்டசபை தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ மசோதாக்களில் முழுமையான ஒரே நேரத் தேர்தல் முறை 2034ல் தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தாலும், 2029லேயே தே.ஜ.க ஆளும் 22 மாநிலங்களை ஒருங்கிணைக்க முடியுமா என்ற சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன. இதுபோன்ற முன்னேற்றம் மாநில முதல்வர்களின் முடிவைச் சார்ந்தது என்றும், கோவா, உத்தராகண்ட், ஹரியானா, டில்லி உள்ளிட்ட சில பா.ஜ.க முதல்வர்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் சவுத்ரி கூறினார்.
2029 லோக்சபாவுடன் சட்டசபை தேர்தலும் நடந்தால் பல மாநிலங்களின் தற்போதைய சட்டசபை பதவிக்காலம் குறைய வேண்டிய நிலை வரும். தகவலின்படி, கோவா, குஜராத், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் குறையலாம்; சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களில் நான்கு ஆண்டுகள் வரை குறையலாம்.





