இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஹிந்து பண்டிகையை அவமதித்ததாக கூறப்படும் வீடியோவை வெளியிட்ட சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிக்கு, நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
பாலியில் ஹிந்துக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அங்கு ‘நியேபி’ (அமைதி நாள்) திருவிழா கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் மக்கள் வீடுகளிலேயே இருந்து, பொழுதுபோக்குகளைத் தவிர்த்து, சத்தமின்றி அமைதியாக இருப்பார்கள். இந்த கட்டுப்பாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும்; இது ஆண்டுதோறும் மார்ச் 19-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பாலிக்கு வந்த லூசியன் ஆன்ட்ரின் என்பவர், இந்த பண்டிகையை அவமதிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. அது சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தீவுக்கு வந்தபோது பண்டிகை விதிமுறைகள் குறித்து ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
டென்பசார் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், பாரம்பரியம் குறித்து தனக்கு தெரியாது என்றும், உணவு கிடைக்காததால் அவ்வாறு நடந்துவிட்டதாகவும் கூறி, தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும், அவர் ஏற்கனவே சிறையில் இருந்த ஐந்து மாதத்தை தண்டனையில் கழித்துக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.





