வங்கதேசத்தின் ரங்பூர் நகரில், பூட்டிய வீட்டிற்குள் 12 வயது சிறுவன் உட்பட ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் கூறுகையில், சனிக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் ரங்பூர் நகரின் தாஸ்பாரா பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி (65), அவரது மனைவி பிரீதிலதா சக்ரவர்த்தி (50), மகள் ஆகாமி சக்ரவர்த்தி பிரார்த்தி (23) மற்றும் மகன் பிரியாம் சக்ரவர்த்தி (12) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மரணங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

கணபதி சக்ரவர்த்தியின் உறவினர்கள் கூறுகையில், குடும்பத்தினரின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அச்சமடைந்து இரவில் வீட்டிற்கு வந்ததாக தெரிவித்தனர். வீட்டு கதவு பூட்டப்பட்டிருந்ததுடன், உள்ளே விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் போலீசார் வந்து பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உடல்களை மீட்டதாகவும் கூறினர்.

சமீப காலமாக வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்ததாக வெளியான இந்த தகவல் கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.