அமெரிக்கா கனடா பொருட்களுக்கு கடுமையான சுங்க வரி விதித்ததைத் தொடர்ந்து, அதற்கு தக்க பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இது கனடா மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவுகிறது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா–கனடா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த சில மாற்றங்களால் பேச்சுவார்த்தையை கனடா ரத்து செய்ததாக கார்னி குறிப்பிட்டார். இதையடுத்து, கனடாவின் சுமார் ரூ.1.90 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் மீது அமெரிக்கா 50% சுங்க வரி விதித்தது.
இதற்கு பதிலாக, செப்டம்பர் 8 முதல் அமெரிக்கப் பொருட்கள் மீது ‘டாலருக்கு டாலர்’ என்ற விகிதத்தில் கனடா பதிலடி சுங்க வரி விதிக்கும் என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், அமெரிக்கா தனது வரிகளை கணிசமாகக் குறைத்தால், அமெரிக்க அலுமினியம், எஃகு மற்றும் மோட்டார் வாகனங்கள் மீதான கனடா வரிகளை நீக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், அமெரிக்க மதுபான விற்பனையை மீண்டும் தொடங்க மாகாணங்களை ஊக்குவிக்க கனடா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்த இறுதி நிபந்தனைகள் ஏற்க முடியாதவை என்றும், கனடாவின் இறையாண்மையில் சமரசம் செய்யவோ முக்கியத் தொழில்துறைகளைச் சீர்குலைக்கவோ அரசு தயாரில்லை என்றும் கார்னி வலியுறுத்தினார்.
இந்த வர்த்தகப் போர் அமெரிக்காவுடனான உறவில் அடிப்படை மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது என்றும், அமெரிக்க ஒப்பந்தங்களின் நம்பகத்தன்மை குறித்து கனடாவுக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார். பழைய உறவு மீண்டும் திரும்ப வாய்ப்பு இல்லை என்ற நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.





