புதுச்சேரி திருபுவனை தொழிற்பேட்டையில் இயங்கும் தனியார் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்ததாக திருபுவனை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. சாய் சரவணன் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

‘ப்ரிஜ்’ உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் ‘வெர்ல்பூல்’ நிறுவனத்துக்கு எம்.எல்.ஏ. ஆய்வுக்காக சென்றதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பணியில் இருந்தவர்கள் தடுத்தபோதும், அவர் ஆதரவாளர்களுடன் உள்ளே சென்றதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

நிறுவன மேலாளர் சிவராமகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், அத்துமீறி நுழைதல், பாதுகாப்பு அதிகாரிகளை திட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், பொது இடங்களை நிறுவனம் ஆக்கிரமித்ததாக வந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்ய சென்றபோது, மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எம்.எல்.ஏ. பி.சி.ஆர். செல் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நிறுவன மேலாளர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.