மத்திய அரசு கொண்டு வந்த சுரங்கங்கள் மற்றும் கனிமவள மேம்பாடு–ஒழுங்குமுறை சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர காங். ஆளும் மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், இந்த மாற்றம் மாநில உரிமைகளையும் வரி வருவாயையும் பாதிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டுகின்றன.
இந்த சட்டத்திருத்தம் கடந்த பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் கடும் அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் 18-ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததையடுத்து நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதன் பின்னணியில், எதிர்க்கட்சிகள் மாநிலங்களின் நிதி அதிகாரம் குறைக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அரசியல் சாசனத்தின் படி சுரங்கத் துறையை முறைப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தாலும், கனிமவளங்கள் மற்றும் கனிமங்கள் உள்ள நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களிடமே இருப்பதாக மாநிலங்கள் வலியுறுத்துகின்றன. மேலும், கனிம சுரங்க குத்தகை, கனிம ஆய்வு உரிமம் போன்ற அனுமதிகளை மாநில அரசுகளே வழங்குகின்றன; விதிகள் மற்றும் ஏல நடைமுறைகளை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.
2024-ல் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, மாநிலங்களுக்கு வரி விதிக்க முழு அதிகாரம் இருப்பதை உறுதிப்படுத்தி, 2005 முதல் நிலுவையில் உள்ள வரிகளையும் வசூலிக்க அனுமதி அளித்தது. ஆனால் புதிய சட்டத்திருத்தம் அந்த தீர்ப்பை முடக்கும் வகையில், பழைய நிலுவை வரி பாக்கிகளை செல்லாதாக்குகிறது என்றும், நீதிமன்ற தீர்ப்பை சட்ட அடிப்படையை மாற்றாமல் பார்லிமென்ட் நேரடியாக ரத்து செய்ய முடியாது என்பதால் இது நீதித்துறை அதிகாரத்தில் தலையீடு எனவும் காங். தரப்பு விமர்சிக்கிறது.
இதனால், காங். ஆளும் மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை நாடத் தயாராகி உள்ளன; ஜார்க்கண்ட் அரசையும் இந்த சட்டப் போராட்டத்தில் இணைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ராயல்டி, மாவட்ட கனிம நிதி, போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் காரணமாக மாநிலங்களுக்கிடையே வரி விதிப்பில் சீரற்ற நிலை இருப்பதாகவும், ஒரே மாதிரி முறை கொண்டு வந்தால் முதலீடு ஈர்க்கப்பட்டு எக்கு, சிமென்ட், மின்சாரம், உட்கட்டமைப்பு போன்ற துறைகளின் உற்பத்தி செலவு குறையும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது; மேலும் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கிறது.





