தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இனிமேல் கட்சியின் நிர்வாகிகள் உட்கட்சி தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர் என்றும், புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்த பின் அந்த தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், கட்சி வெற்றியும் தோல்வியும் பார்த்திருக்கிறது; ஒரு தேர்தல் தோல்வியை நிரந்தரமாகக் கருதாமல், எதிர்காலத்தை திட்டமிடும் வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். கட்சியின் அமைப்பு முறைதான் அதன் தொடர்ச்சியை காக்கும் என்ற கருணாநிதியின் கருத்தையும் அவர் நினைவூட்டினார்.

தோல்விக்கு பல காரணங்கள் உள்ளதாகவும், அதில் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒரு காரணம் எனவும் ஸ்டாலின் கூறினார். தவறுகளை முதலில் நாமே வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், தனிநபர் தவறுகள் 75 ஆண்டு கால கட்சியை பாதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், அவை சிலருக்கு கடினமாகவும் கசப்பாகவும் இருக்கலாம் என்றும் கூறி, அனைவரின் ஒத்துழைப்பையும் கேட்டார். இளைஞர்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும், புதுமுகங்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உறுப்பினர் சேர்க்கை நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், சேர்க்கை முடிந்த பின் அனைத்து மட்டங்களிலும் உட்கட்சி தேர்தலை முறையாக நடத்துவோம் என்றார். தேர்தல் மூலம் வெற்றி பெறும் நிர்வாகிகள் சிறப்பாக செயல்படுவர் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். மேலும், மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும், கட்சியினர் தங்கள் வீட்டிலும் உறவினர்களிடமும் அரசியல் பேசித் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.