ஜெய்ப்பூரைச் சேர்ந்த பாதிரியார் ரவி மோகன் பஹாடியா மீது, சட்டவிரோதமாக வெளிநாட்டு நன்கொடை ரூ.2.88 கோடி பெற்றும் அதில் ஒரு பகுதியை மதமாற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை (ED) வழக்கு பதிவு செய்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை கண்காணிக்க வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (எப்.சி.ஆர்.ஏ) நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் நிதி பெறுதல், கணக்குப்பதிவு மற்றும் அறிக்கைகள் தாக்கல் செய்வது உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், பஹாடியாவுக்கு அமெரிக்காவிலிருந்து எப்.சி.ஆர்.ஏ பதிவு இன்றி நன்கொடை வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பேரில் பாதிரியாருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனையில் பஹாடியா மற்றும் அவரது மனைவி குஞ்ஜன் சர்மா ஆகியோர் எப்.சி.ஆர்.ஏ பதிவு இன்றி வெளிநாட்டு நிதி பெற்றதை காட்டும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை கூறியது.

அந்த நிதி தொழில் மற்றும் நிர்வாக ஆலோசனை, மக்கள் தொடர்பு சேவைகள், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து குடும்ப பராமரிப்பு மற்றும் சேமிப்பு போன்ற பல்வேறு காரணங்களின் கீழ் பெறப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒரு பகுதி தனிப்பட்ட செலவுகள், வெளிநாட்டு பயணம் மற்றும் சொத்து வாங்குதல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும், ஜெய்ப்பூரில் எஸ்.சி பிரிவைச் சேர்ந்த வால்மீகி சமூகத்தினரையும், தெற்கு ராஜஸ்தானில் எஸ்.டி பிரிவைச் சேர்ந்த பழங்குடியினரையும் மதமாற்ற வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. அந்நிய செலாவணி தொடர்பான சட்டப்பிரிவுகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.