திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் இன்று (ஆக.23) ஒரே நாளில் 444 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கோயில் வரலாற்றில் ஒரே நாளில் நடந்த திருமணங்களிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
ஆவணி மாத முகூர்த்த நாட்களில் குருவாயூரில் திருமணங்கள் அதிகமாக நடைபெறுவது வழக்கம். அந்த நாட்களில் பக்தர்களின் வருகையும் வழக்கத்தை விட அதிகரிக்கும் நிலையில், இன்று முகூர்த்த நாளில் திருமண எண்ணிக்கை சாதனை அளவுக்கு உயர்ந்தது.
குருவாயூர் தேவசம் போர்டு இயக்குநர் கோபிநாத் கூறுகையில், கோயில் வரலாற்றில் இதுபோன்ற அளவில் ஒரே நாளில் திருமணங்கள் நடைபெற்றது இதுவே முதல் முறை என தெரிவித்தார். ஏற்பாடுகள் சீராக நடைபெற பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பும் முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டத்தை ஒழுங்குபடுத்த 100க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் நிறுத்தப்பட்டனர். மருத்துவ உதவிக்கான வசதிகள் செய்யப்பட்டு, மருத்துவர்கள் தயார்நிலையில் இருந்தனர். அதிகாலை 4.10 மணிக்கு முதல் திருமணம் முடிந்ததாகவும், கோயிலின் 6 மண்டபங்களில் திருமணங்கள் நடத்தப்பட்டு, சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 60 திருமணங்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.





