பிரிட்டனின் டெய்லி மெயில் நாளிதழ் வெளியீட்டாளருக்கு, வழக்கு செலவின் இடைக்கால தொகையாக ரூ.124 கோடி செலுத்த வேண்டும் என்று இளவரசர் ஹாரி உள்ளிட்ட ஏழு பிரபலங்களுக்கு லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியுரிமை மீறல் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, டெய்லி மெயில் நாளிதழை வெளியிடும் அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் லிமிடெட் (ANL) நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்டது. மனுதாரர்களில் இளவரசர் ஹாரி, பாடகர் சர் எல்டன் ஜான், நடிகை எலிசபெத் ஹார்லி உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

பல ஆண்டுகளாக தங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்க ANL நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சட்டவிரோத முறைகளை பயன்படுத்தியதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். தொலைபேசி ஒட்டுக்கேட்பு, குரலஞ்சல் திருட்டு, கார்கள் மற்றும் வீடுகளில் ரகசிய கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட 97 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

11 வாரங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு, 97 குற்றச்சாட்டுகளில் ஒன்றையும் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்க மனுதாரர்கள் தவறியதாக நீதிமன்றம் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் ANL நிறுவனம் வெற்றி பெற்ற நிலையில், தற்காப்புக்காக செய்த செலவுகளை மனுதாரர்களே ஈடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு செலவாக ANL நிறுவனம் ரூ.444 கோடி வரை செலவிட்டதாக கூறப்படுகிறது. அதில் முதற்கட்டமாக ரூ.124 கோடி உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், மீதித் தொகையும் பின்னர் வழங்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கை தொடர்ந்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதிச் சுமை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.