பாஜவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய பொறுப்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் இன்று ஆலோசனை நடத்தினார். கட்சியின் அமைப்பு பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் 65 பேர் கொண்ட தேசிய பொறுப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்திர ராஜே சிந்தியா மற்றும் முன்னாள் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராம் மாதவ் ஆகியோர் தேசிய துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பொறுப்பாளர்களின் முதல் கூட்டம் டில்லியில் உள்ள பாஜ தேசிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தலைமை அலுவலகத்திற்கு வந்தார்; அவரை நிதின் நபின் பூக்கொடுத்து வரவேற்றார். பின்னர் புதிய தேசிய நிர்வாகிகளுடன் பிரதமர் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
ஆலோசனையில் ஜென் சி தலைமுறையினரின் பிரச்னைகளை கேட்டறிந்து, அவற்றைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். மேலும், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கட்சியைப் பலப்படுத்துவது, பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பை உருவாக்குவது மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.





