தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு டில்லியில் நடைபெற்ற சந்திப்பில், இந்தியாவின் விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்த உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களை ஈர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சி.இ.ஓ.களுடன் கலந்துரையாடிய மோடி, புதிய துறையில் திறமையும் துணிச்சலையும் வெளிப்படுத்தியதாகக் கூறினார். அரசின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் அவர் குறிப்பிட்டார்.
அரசு எடுக்கும் முடிவுகள் நிலையானதாக இருக்க வேண்டும்; அடிக்கடி மாற்றப்படக் கூடாது என அவர் கூறினார். இவ்வாறு தொடர்ச்சியான கொள்கை நிலைப்பாடு இருந்தால், ஆபத்துகளை எதிர்கொள்ளத் துணிபவர்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் கிடைக்கும் என்றார்.
மேலும், வழக்கமான பயன்பாடுகளைத் தாண்டி சிந்தித்து, தங்களின் தொழில்நுட்பங்கள் அன்றாட சவால்களை சமாளிக்கவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவும் புதிய வழிகளை கண்டறிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பெரிய திருப்புமுனைகள் ஏற்படும் போதெல்லாம் சர்வதேச கவனம் இயல்பாகவே இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பக்கம் திரும்பும் நிலையை நாடு எட்ட வேண்டும் என்றும், இந்தியாவுக்கு வந்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடனும் விண்வெளி நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட உலகளாவிய விண்வெளித் துறையினர் முன்வர வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.





