புதுடில்லி: பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் பயங்கரவாதி சயீத் இப்ராகிமுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சம்மன் அனுப்பியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதார லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்’ பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 15 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலின் மூளையாக லஷ்கர்-இ-தொய்பா தலைவன் சயீத் இப்ராகிம் செயல்பட்டதாக என்ஐஏ குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அவனுக்கு எதிராக ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படும் சயீத் இப்ராகிமுக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.