மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ஊழல் மற்றும் கட்சி நிதி போன்ற விஷயங்களை குறிப்பிடும் போதே எதிர்க்கட்சியினர் கோபப்படுவதாக தெரிவித்தார்.

வழக்கு நடவடிக்கைகள் வேறு, சட்டசபை நடவடிக்கைகள் வேறு என கூறிய அவர், சட்டசபையில் தற்போது மானியக் கோரிக்கைகள் விவாதத்தில் உள்ளதாகவும், அதில் செய்ய வேண்டிய பணிகளை அரசு செய்து வருவதாகவும் சொன்னார். தேவையில்லாத வார்த்தைகளை எதிர்க்கட்சியினர் பேசும்போது தான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் கூறினார்.

டிரான்ஸ்பார்மர் தொடர்பான வழக்கு மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததாகவும், இவ்வளவு பெரிய ஊழல் விவகாரத்தில் ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். வழக்குகளை சும்மா போட முடியாது என்றும் கூறினார்.

பழிவாங்கல் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், எதிர்க்கட்சியினரை குறிவைக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும், முதல்வர் உள்ளிட்ட யாருக்கும் அத்தகைய எண்ணம் இல்லை என்றும் கூறினார். தேர்தலில் மக்களே அவர்களை “பழிவாங்கிவிட்டார்கள்” என்றும், திமுக தேர்தல் செலவு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான நிலைப்பாடு குறித்து குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.