டில்லி யமுனை நதிக்கரையில் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவித்ததாக கூறி ‘வாழும் கலை’ அமைப்பிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.5 கோடி அபராதத் தொகையை உடனடியாக திருப்பி வழங்க டில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு (DDA) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு டில்லி யமுனை நதிக்கரையில் ‘வாழும் கலை’ அமைப்பு சார்பில் ‘உலக கலாசார திருவிழா’ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி யமுனை நதிக்கரையின் மென்மையான சூழலியல் மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, ‘யமுனை நதியை காப்போம்’ இயக்கத்தினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த NGT, ‘வாழும் கலை’ அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்தது. ‘வாழ்க்கை வளம் பெற’ என்ற அறக்கட்டளை மூலம் அந்த முழுத் தொகையும் DDA-க்கு செலுத்தப்பட்ட நிலையில், அபராதத்தை எதிர்த்து அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்கள் முடிந்த பிறகு வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பில், திருவிழா காரணமாகவே யமுனை நதிக்கரையின் மென்மையான சூழலியல் மண்டலத்திற்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டதாக நிரூபிக்கும் வலுவான ஆதாரங்கள் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகையை DDA திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், யமுனை நதி படுகையை பாதுகாக்க தவறியதாக DDA-க்கு நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது. இந்த தீர்ப்புடன், ‘வாழும் கலை’ அமைப்பு மேற்கொண்ட நீண்டகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.