பொது வாழ்க்கையில் நீண்ட காலம் இருந்தாலும், தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் வெளிப்படையாக பேசாதவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி. 79 வயதான அவர் தன் சுயசரிதையை நூலாக எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் நவம்பர் 10ல் வெளியாக உள்ளது.
500 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த நினைவுக்குறிப்பு, பிரபல அமெரிக்க பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுகிறது. Blanking: A Journey of Love என்ற பெயரில் வரும் இந்த நூல், ஆடியோ புத்தகமாகவும் வெளியிடப்பட உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுவதன்படி, ராஜிவ் காந்தியை சந்தித்தது, அவருடன் ஏற்பட்ட காதல், இந்திரா காந்தி படுகொலை, ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இதில் இடம்பெற்றுள்ளன. அதற்குப் பின் அரசியலில் அவர் எதிர்கொண்ட சவால்களும் இதில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் குறித்தும் பல குறிப்புகள் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீபெரும்புதூர் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படும் காங்கிரஸ் தலைவர் மரகதம் சந்திரசேகர், சோனியாவுக்கு தொலைபேசியில் என்ன தெரிவித்தார் போன்ற விவரங்களும் இதில் இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நூல் வெளிநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், நூல் மூலம் கிடைக்கும் வருவாய் பிரியங்காவுக்கு செல்ல வேண்டும் என சோனியா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன் இந்த நூல் பொதுமனநிலையை பாதிக்கக்கூடும் என கட்சிக்குள் சிலர் நம்பிக்கை தெரிவிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.





