தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு திமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் முதல்வர் விஜய் மற்றும் சில அமைச்சர்கள் குறித்து பேசிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில், எதிர்க்கட்சி தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி மேடையில் இருந்த நிலையில், மணமக்களை வாழ்த்தி எம்.எல்.ஏ உரையாற்றினார். அந்த உரையில், தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கூட்டத்தில் எழுந்த ஒரு கோஷத்தைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், பின்னர் விசாரணை நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே உரையில், சட்டசபை நிகழ்வுகளை எடுத்துக்காட்டி, முதல்வர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் குறித்து அவர் கூறிய வார்த்தைகள் கவனம் பெற்றன. குறிப்பாக பெண் அமைச்சர் கீர்த்தினா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன், சட்ட அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோரையும் ஒருமையில் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, மூத்த தலைவர்களை குறிப்பிடும் விதம் குறித்து அரசியல் வட்டாரங்களில் விமர்சனமும் விவாதமும் எழுந்துள்ளது. இந்த பேச்சு தற்போது உள்ளூரில் பரவலாக பேசுபொருளாகியுள்ளது.





