சென்னை: தமிழக அரசு உத்தரவாதத்தின் கீழ் பெறப்பட்ட கடன்களில், 24 பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் கடன் நிலுவை ரூ.1.81 லட்சம் கோடி என ஜூலை நிலவரத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் கீழ் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு கேபிள் டிவி நிறுவனம், மாநில விரைவு போக்குவரத்து கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதேபோல் மின் தொடரமைப்பு, மின் உற்பத்தி, பசுமை எரிசக்தி, மின் பகிர்மான அமைப்புகள் மற்றும் சென்னை குடிநீர்–வடிகால் வாரியம் போன்ற அமைப்புகளும் உள்ளன.

இவ்வமைப்புகள் தங்களின் திட்டங்களை முன்னெடுக்க வங்கிகள் மற்றும் மத்திய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுகின்றன. கடன்கள் நேரடியாகவும், அரசு உத்தரவாதத்தின் அடிப்படையிலும் பெறப்படுகின்றன.

இரு வழிகளிலும் பெறப்பட்ட மொத்த கடன் ரூ.3.25 லட்சம் கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரசு உத்தரவாதக் கடன் நிலுவையில், நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட 10 பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.36,256 கோடி, 11 வாரியங்கள் மற்றும் கழகங்களின் கடன் ரூ.1.44 லட்சம் கோடி, மூன்று கூட்டுறவு நிறுவனங்களின் கடன் ரூ.152 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.