உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், மாநிலம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முசௌரி–டேராடூன் சாலையில் இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி, பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக காத்துக் கிடந்தன.

நெரிசலை குறைக்க அதிகாரிகள் கிமாடி சாலை வழியாக வாகனங்களை திருப்பிவிட்டனர். சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு, அந்த வழியில் இலகு ரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

உத்தர்காசி மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. டேராடூன், டெஹ்ரி, பித்ரோகர்க், நைனிடால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை தொடரக்கூடும்; நிலச்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.