பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் டூரின் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஒரு கிலோ எடைக்கு கணக்கிடும் போது இந்தியாவின் தாழ் புவி வட்டப்பாதை (LEO) செலுத்தும் செலவு முக்கிய விண்வெளி நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1960 முதல் 2025 வரை பல நாடுகளில் நடந்த 6,740க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுதல்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2025ல் உலக சராசரியாக ஒரு கிலோ எடையை LEO-க்கு அனுப்ப ரூ.3.71 லட்சம் செலவாகும் என ஆய்வு கணக்கிட்டுள்ளது.
அதே ஆண்டில் அமெரிக்காவில் ரூ.3.10 லட்சம், ஜப்பானில் ரூ.5.08 லட்சம், சீனாவில் ரூ.5.58 லட்சம், ரஷ்யாவில் ரூ.6.41 லட்சம், ஐரோப்பாவில் ரூ.9.50 லட்சம் என மதிப்பிடப்பட்ட நிலையில், இந்தியாவில் ரூ.12.77 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடிவு, இந்திய விண்வெளி திட்டம் குறைந்த செலவில் சாதனைகள் படைக்கும் என்ற பொதுவான கருத்துக்கு மாறுபட்டதாக தோன்றலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்திய ராக்கெட்டுகள் பொதுவாக குறைந்த அளவு சரக்குகளைச் சுமப்பதால், நிலையான ஏவுதல் செலவுகள் குறைந்த கிலோகிராம்களுக்கு பகிரப்படுகின்றன; இதுவே ஒரு கிலோவுக்கான செலவை உயர்த்தும் முக்கிய காரணியாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவில் ஒரு கிலோவுக்கான செலவு குறைவாக இருப்பதற்கு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் மற்றும் உட்கட்டமைப்பு செலவுகளை அதிக எண்ணிக்கையிலான ஏவுதல்களில் பகிர்ந்து கொள்ளும் நடைமுறை போன்ற காரணிகள் முக்கியம் என ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.





