தமிழ்நாடு சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் விஜய் திங்களன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தின் கீழ் புதிய நலத்திட்டம் மற்றும் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான முடிவும் இடம்பெற்றது.
கடந்த நான்கு மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவும் போர் சூழல் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனால் மக்கள் மாற்று எரிபொருளை பயன்படுத்த வேண்டியதும், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, குடும்பங்களின் நிதிசுமையை குறைக்கும் வகையில் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்றார். இதற்கான தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தால் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயன் பெறும் என அரசு தெரிவித்தது. ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருமானம் உள்ள குடும்பங்கள், சிறு-குறு விவசாய குடும்பங்கள், மாற்றுத்திறனாளி குடும்பங்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவுகள் தகுதி பெறும். திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வரும் ஜனவரியில் பொங்கல் பண்டிகை முதல் நடைமுறைக்கு வரும் என்றும், ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும்; புதிய இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
அதேபோல் “வெற்றிப் பயணம்” மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கப்படும் என்றும் அறிவித்தார். முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணத்திற்கு ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில் சாதாரணக் கட்டண பேருந்துகளிலும் இந்த வசதி வழங்கப்படும்; அக்டோபர் 2 முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார். இந்த விரிவாக்கத்தால் ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி செலவாகும்; வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை; திருநரும் இதில் பயன் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.





