தலைநகர் டில்லியில் திங்கள்கிழமை இடைவிடாத கனமழை தொடர்ந்ததால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலும் மழை நீடித்து, சாலைகளில் நீர் தேக்கம் ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் தரையிறங்க முடியாத 15 விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அவற்றில் 12 விமானங்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு மாற்றப்பட்ட நிலையில், 2 விமானங்கள் சண்டிகருக்கும், ஒரு விமானம் லக்னோவுக்கும் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சுமார் 400 விமானங்கள் தாமதமானதுடன், 26 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதே நேரத்தில் வெளிநாடுகளிலிருந்து வரவிருந்த 50க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகையும் தாமதமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விமான நிலையம் செல்லும் முன் பயணிகள் தங்களின் விமான நேர அட்டவணையை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





