ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, புதுடில்லி ஷா அரங்கிற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
‘இடஒதுக்கீட்டு மறுசீரமைப்பு’ என்ற இயக்கம், இந்த விவகாரத்தில் போராட்டங்களை தீவிரப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்தும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் முழக்கமிட்டதாக தெரிவிக்கப்பட்டது. யுஜிசி புதிய விதிகளுக்கும் எதிர்ப்பு கோஷங்கள் எழுந்தன.
அடுத்த கட்டமாக ஷா அரங்கில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும், அதற்கான அனுமதி கிடைத்துவிட்டதாகவும் பதிவுகள் வைரலானதால், மீண்டும் இளைஞர்கள் கூடக்கூடும் என்ற காரணத்தால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஆனால், ஷா அரங்கில் போராட்டம் நடத்த எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் டில்லி போலீசார் விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து டில்லி டிசிபி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஜந்தர் மந்தரில் இன்று ஒன்றுகூடுமாறு வீடியோக்கள் பரவினாலும், இதுபோன்ற கூடுகைகளுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தார். மேலும், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகவும், பொய்யான தகவல்களை நம்பவும் பகிரவும் வேண்டாம் என்றும், மீறி பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.





