புதுடில்லி: மலேஷியாவில் தலைமறைவாக இருந்த மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அமைப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார்.
ஜஸ்ப்ரீத் சிங், அஜய் சிங், பவன்தீப் சிங் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தி பணம் கேட்டு மிரட்டல், எல்லை தாண்டி ஆயுதங்கள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களிலும், பஞ்சாப் லூதியானாவில் கையெறி குண்டு தாக்குதல் சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், மலேஷியாவில் மறைவாக இருந்தபோது அவர்கள் பிடிபட்டனர். பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
அமித் ஷா வெளியிட்ட அறிக்கையில், இவர்கள் பாம்பியா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், தற்போது இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் “பாதுகாப்பான இந்தியா” கொள்கைக்கு ஏற்ப, 2026ஆம் ஆண்டில் இதுவரை 51 குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.





