அமெரிக்காவில் செப்.15 முதல் அமலுக்கு வரும் மாணவர் விசா விதிமுறை மாற்றங்களை முன்னிட்டு, வெளிநாட்டு மாணவர்கள் அதற்கு முன்பே பல்கலைக்கழகத்திற்கு திரும்ப வர வேண்டும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய நடைமுறையில், F-1 விசா கொண்ட மாணவர்கள் “டியூரேஷன் ஆப் ஸ்டேட்டஸ்” என்ற சலுகையின் கீழ், படிப்பு முடியும் வரை தேவையான காலம் முழுவதும் அமெரிக்காவில் தங்க அனுமதி பெறுகின்றனர்.
ஆனால் செப்.15க்கு பிறகு அமெரிக்காவிற்குள் நுழையும் மாணவர்களுக்கு, அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை மட்டுமே F-1 அனுமதி வழங்கப்படும். மேலும் படிப்பு முடிந்த பின் நாடு திரும்ப வழங்கப்பட்டிருந்த 60 நாட்கள் அவகாசம் 30 நாட்களாக குறைக்கப்படுகிறது.
குறைக்கப்பட்ட காலத்தைத் தாண்டி தங்க வேண்டுமெனில், தனியாக அனுமதி நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்க வேண்டும். விதிகள் அமலுக்கு வரும் போது ஏற்கனவே அமெரிக்காவில் இருப்பவர்கள் இடைக்கால ஏற்பாடுகளில் சேர்க்கப்படலாம்; ஆனால் குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வெளிநாடு சென்று மீண்டும் திரும்புவோர் வேறுபட்ட சேர்க்கை/நுழைவு நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் என ஹார்வர்டு தெரிவித்துள்ளது.





