திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதை செப்டம்பர் 8 வரை தடை செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். மேலும், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயகுமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, அ.தி.மு.க.வை விட்டு த.வெ.க.வில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதிகளில் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இடைத்தேர்தல் அறிவிப்பை தடுக்க உத்தரவிட வேண்டும் என திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாஜ நிர்வாகி வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஜூலை 31 அன்று விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 24 வரை இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து, தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டசபை செயலர், முதல்வர் விஜய் உள்ளிட்டோரிடம் பதில் கேட்டு உத்தரவிட்டிருந்தது. அந்த தடை காலம் முடிவடைய இருந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடை செப்.8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.