புதுடில்லி: இந்திய ராணுவத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள இன்சாஸ் ரைபிள்களுக்கு மாற்றாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட AK-203 ‘ஷேர்’ துப்பாக்கி சோதனைச் சூட்டில் பரிசோதிக்கப்பட்டது.

பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சுயசார்பை அதிகரிக்கும் மத்திய அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இன்சாஸ் ரைபிள்களில் குறிப்பாக குளிர்காலங்களில் சில சிக்கல்கள் ஏற்படுவதாக வீரர்கள் கூறி வந்த நிலையில், மாற்று துப்பாக்கி தேவை வலியுறுத்தப்பட்டதாக தகவல்.

AK-203 ரைபிள்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இந்தியா–ரஷ்யா கூட்டுத் திட்டமாக 2019-ல் ‘இந்தோ ரஷ்யன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (IRRPL) நிறுவனம் உருவாக்கப்பட்டது; அதே ஆண்டில் இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது. உத்தரப் பிரதேசம் கோர்வா தொழிற்சாலையில் தயாரான துப்பாக்கிகள் 2024 முதல் ராணுவத்துக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இப்போது, முழுமையாக உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் பாகங்களுடன் ராணுவத்துக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பதிப்புக்கு ‘ஷேர்’ என பெயரிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேலாண் இயக்குநர் மேஜர் ஜெனரல் எஸ்.கே. ஷர்மா, இந்தியாவில் வெறும் ஒன்றிணைப்பைத் தாண்டி ஒவ்வொரு பாகத்தையும் நாட்டிலேயே தயாரித்ததே முக்கிய சாதனை என்றும், இதில் சுமார் 50 முக்கிய பாகங்கள், 180 துணைப் பாகங்கள் மற்றும் சுமார் 120 உற்பத்தி செயல்முறைகள் உள்ளன என்றும் கூறினார்.

AK-203 ‘ஷேர்’ துப்பாக்கியில் 7.62×39 மிமீ தோட்டாக்களை பயன்படுத்த முடியும்; இது கலாஷ்னிகோவ் AK-100 வகையைச் சேர்ந்தது. மடக்கவும் சரிசெய்யவும் கூடிய பின்பகுதி, வசதியான பிடிமானம் மற்றும் துணைக்கருவிகளை பொருத்தும் வசதி இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 6,01,427 துப்பாக்கிகளை உற்பத்தி செய்ய ரூ.5,200 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை IRRPL பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.