இந்தியா தனது அண்டை நாடுகள் எப்போதும் இந்தியாவின் நலனுக்காகவே செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை; இரு தரப்பும் பொதுவான உடன்பாட்டை எட்டும் போதே உறவு சீராகவும் நிலையாகவும் இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

டில்லியில் தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் வெளியுறவு கொள்கை பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டது என்றார். எந்த உறவும் சிறப்பாக இயங்க வேண்டுமெனில் அது இரு நாடுகளுக்கும் பயன் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா அண்டை நாடுகளை புரிந்து கொண்டு மதிப்பது போலவே, அந்நாடுகளும் இந்தியாவை மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஜெய்சங்கர் கூறினார். பயங்கரவாதம் போன்ற விவகாரங்களில் இந்திய மக்களின் கருத்தை புறக்கணிக்க முடியாது என்றும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்று இந்திய மக்கள் கருதுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா–பாகிஸ்தான் உறவுக்கு நீண்ட வரலாறு இருப்பதாகக் கூறிய அவர், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை பயன்படுத்துவதில் பாகிஸ்தான் தனித்து நிற்கிறது என்றார். அண்டை நாட்டை தாக்கவும் நெருக்கடி தரவும் பாகிஸ்தான் போல பயங்கரவாதத்தை வேறு எந்த நாடும் பயன்படுத்துவதில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியா–சீனா உறவைப் பற்றி பேசுகையில், இரு நாடுகளும் பெரிய பொருளாதாரங்கள்; உலகளாவிய வினியோகத் தொடரில் முக்கிய பங்காளிகள் என்பதால் நிலையான உறவு இரு தரப்புக்கும் நன்மை தரும் என்றார். ஆனால் எல்லைப் பகுதியில் நிலவும் சூழலே இருதரப்பு உறவை தீர்மானிக்கிறது என்றும், இந்தியா தனது திறன்களை வளர்த்துக் கொண்டே சீனா உள்ளிட்ட உலக நாடுகளுடன் நல்லுறவை தொடர்ந்து பேண வேண்டும் என்றும், போட்டி நிறைந்த உலகில் நம்பிக்கையுடன் சீனாவை எதிர்கொண்டு தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.