சென்னை: கருப்பு உடை அணிந்த பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் காட்சி கொண்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பவர் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என சிலர் பதிவிட்டு விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், அந்த வீடியோவில் இருப்பது தானல்ல என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். மேலும், அது தானாக இருந்தாலும் அதில் என்ன தவறு உள்ளது என்றும், ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி போன்றவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இத்தகைய விவகாரங்கள் பின்னால் இருக்கும் மனநிலை பிற்போக்குத்தனமானது என குறிப்பிட்ட அவர், கொள்கைகள், நிர்வாகம் அல்லது செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாதவர்கள், தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கற்பனைக் கதைகளை உருவாக்குவதாகவும் கூறினார்.

மேலும், முக ஒற்றுமை காரணமாக இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்ட அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அமைச்சர், அவர் விருப்பப்படி வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ வேண்டும் என்றும் தெரிவித்தார்.