மும்பையில் பிரபலமான உணவகங்கள் முதல் சாலையோர தள்ளுவண்டி கடைகள் வரை, துாய்மை மற்றும் உணவுத் தரத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு உணவு பாதுகாப்புத்துறை ஆணையரும் ஐஏஎஸ் அதிகாரியுமான துக்காராம் முண்டே மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என மும்பைவாசிகள் தெரிவிக்கின்றனர்.
வர்த்தக நகரமான மும்பையில் ‘வடா பாவ்’ தினசரி லட்சக்கணக்கானோரின் விருப்ப உணவாக உள்ளது. சுவை இருந்தாலும், துாய்மை மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த கவலைகள் நீண்ட காலமாக இருந்தன.
துக்காராம் முண்டே பொறுப்பேற்ற பிறகு, உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களில் ஆய்வுகளை தீவிரப்படுத்தினார். பல கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதுடன், சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டதாக செய்தி குறிப்பிடுகிறது.
என்.டி.டி.வி. நடத்திய கள ஆய்வில், பிரபல நிறுவனங்கள் முதல் தள்ளுவண்டி கடைகள் வரை மாற்றங்கள் தென்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஊழியர்கள் கையுறை, தொப்பி அணிந்து பணியாற்றுவதும், வாடிக்கையாளர்களுக்கு காகித தட்டு மற்றும் டிஷ்யூ பேப்பர் வழங்கப்படுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவு தயாரிக்கும் இடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுவதுடன், சேமிப்பு பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும், மத்திய உணவு பாதுகாப்புத் துறையின் லைசென்ஸ் பார்வைக்கு தெளிவாக வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை மேலாளர் ஒருவர் சமையல் எண்ணெய் தினமும் இரண்டு முறை மாற்றப்படுவதாக கூறிய நிலையில், இந்த நடவடிக்கைகள் சுகாதார விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாகவும், உணவுத் தரத்தில் கவனம் செலுத்தினால் நோய் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும் எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




