மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பீயூஷ் கோயல், 200க்கும் மேற்பட்ட தொழில் பிரதிநிதிகள் அடங்கிய பெரிய இந்திய வர்த்தகக் குழுவுடன் இன்று ஜப்பான் நோக்கி நான்கு நாள் பயணமாக புறப்படுகிறார்.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் இந்தியா–ஜப்பான் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவது. இதற்காக ஜப்பான் அரசின் முக்கிய அமைச்சர்கள், தொழில் நிறுவனத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் குழுவினர் ஆலோசனைகள் நடத்த உள்ளனர்.
டோக்கியோவில் ஜப்பான் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அகசாவா ரியோசேயுடன் பீயூஷ் கோயல் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் ஜப்பானின் முன்னணி நிறுவனங்களின் உயரதிகாரிகளையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 1,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக கூட்டமைப்பான கெய்டன்ரென் அமைப்பின் பிரதிநிதிகளுடன் நடைபெறும் வட்டமேசை கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். ஜப்பானின் முக்கிய தொழில் மையமான நகோயாவில் வர்த்தக தொழில் சபை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
பயணத்தின் இறுதிக்கட்டமாக ஒசாகாவில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான ‘பிசினஸ் ரோட்ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர், எலக்ட்ரானிக்ஸ், தொழில்துறை மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகளைச் சேர்ந்த தொழில் தரப்பினருடன் சந்திப்புகளும் நடத்த உள்ளார்.





