செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் உள்ள சோழர் கால கலைச் செல்வங்களான சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் சிதைவடைந்து வருவதால், அவற்றை பழமை மாறாமல் பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை என சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவ–மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லூரியின் பதிப்பு ஓவியத் துறை மாணவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் கோவிலில் சிறப்பு வரைகலைக் களப்பயிற்சி மேற்கொண்டனர். பழந்தமிழர்களின் கலை நுணுக்கம், செய்நேர்த்தி, வடிவக்கலை அம்சங்களை நேரில் ஆய்வு செய்யும் நோக்கில், நுணுக்கமான சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை வரைகோடுகள், வண்ணப் பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தினர்.

இந்த கோவில் 1,400 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. 13ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாகவும், 17ம் நூற்றாண்டில் நாயக்கர்களால் சீரமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்மண்டபம், சுற்றுச்சுவர், வசந்த மண்டபம், கோபுர வாசல்கள் ஆகிய இடங்களில் கவின்மிகு சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும், கோவிலின் வலதுபுறத் தேரடி மண்டப விதானத்தில் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த அபூர்வ வண்ண ஓவியங்களும் உள்ளன.

இதுகுறித்து பதிப்பு ஓவியத் துறை தலைவர் கு.கவிமணி கூறுகையில், நந்தி மண்டபத்தில் உள்ள சிலைகள் மற்றும் சிறப்புமிக்க துர்க்கை அம்மன் சிலைகளில் எண்ணெய் படிந்து சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். சுத்தம் செய்யாமல் விட்டால் விரிசல் ஏற்பட்டு சேதமடைய வாய்ப்புள்ளதாகவும், மண்டப விதானங்களில் உள்ள ஓவியங்களும் மெல்ல மங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, சிலைகள் மற்றும் ஓவியங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்றும், வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் உலோகச் சிற்பங்கள் உள்ளிட்ட கைவினைப் பொருட்களை அறையில் பூட்டி வைக்காமல் ஆன்மிக அருங்காட்சியகமாக காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மாணவர்களின் களப்பயிற்சிகளுக்கு ஹிந்து சமய அறநிலையத் துறை தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.