திருச்சி: தமிழக சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பின்வரிசையில் அமர்ந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக முறையில் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுவதாகவும், தங்களது தரப்பில் முதல்முறையாக சட்டசபைக்கு வந்த உறுப்பினர்கள் மரியாதையுடன் கருத்துகளை முன்வைப்பதாகவும் கூறினார். ஆனால் தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கூச்சலிடுவது, வரிக்கு வரி கத்துவது, ஓடுவது போன்ற செயல்களால் சட்டசபை ‘சந்தை’ போல மாற்றப்படுவதாகவும், தற்போதைய அமைச்சர்கள் பேசும்போது முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முதல்வர் மற்றும் அரசை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் கோவில் அறங்காவலர் நியமனக்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அறநிலையத்துறை தொடர்பான அறிவிப்புகள் வெளியான பின்னர், திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். அந்த அறிவிப்புகள் குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ள முன்னாள் தி.மு.க. அமைச்சர் முயல்வது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், 100 நாட்களில் அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட முடியாது; இது சினிமா அல்ல என்றும் அவர் கூறினார். திருப்பதி கோவிலில் பக்தர்கள் லக்கேஜ், செல்போன்களை கவுன்டர் மற்றும் பாதுகாப்பு அறைகளில் ஒப்படைத்து நீண்ட நேரம் அமைதியாக காத்திருப்பதை எடுத்துக்காட்டிய அவர், தமிழக கோவில்களிலும் அதுபோன்ற மனநிலை மக்களுக்கு உருவாக வேண்டும் என்று தெரிவித்தார்.




