சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 24) எம்எல்ஏக்களின் முதல் உரையை குறிப்பிட பயன்படுத்தப்படும் ‘கன்னிப்பேச்சு’ என்ற சொல்லை தவிர்த்து, ‘அறிமுக உரை’ என மாற்ற சபாநாயகரிடம் அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை விடுத்தார்.

உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் மகாலிங்கம் பேசியபோது திமுக உறுப்பினர்கள் இடையிடையே கருத்து கூறி குறுக்கிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த ராஜ்மோகன், அது உறுப்பினரின் முதல் உரை என்றும், அவர் தனது தொகுதி மக்களின் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்; அதில் இனிப்பும் கசப்பும் இருக்கலாம் என்றார்.

உறுப்பினர் பேசி முடித்த பிறகு எதிரில் அமர்ந்திருப்பவர்கள் பேசுவது நல்லது என்றும், அடிக்கடி குறுக்கிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி, ‘கன்னிப்பேச்சு’ என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் ‘அறிமுக உரை’ என்று சொல்லலாம் என சட்டசபையில் கோரிக்கை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், இது நல்ல ஆலோசனை என கூறி, ஆலோசித்து ‘கன்னிப்பேச்சு’ என்பதை ‘அறிமுக உரை’ என்று மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.